குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட வேண்டிய உணவு

குழந்தைகளுக்கு முதல் உணவாகத் தரும் உணவு வகைகளில் ராகியும் (Ragi) ஒன்று. ஆரோக்கியத்துக்கான அடையாளம் ராகி (கேழ்வரகு) எனச் சொல்லலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட ஏற்றது. 4000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே ராகி சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கிறது. உலகில் உள்ள மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ராகியைச் சாப்பிடுகின்றனர். உலகளவில் செய்யும் விவசாயத்தில் ராகி 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் ராகி உற்பத்தியை அதிகம் செய்யும் மாநிலம், கர்நாடகம். வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்துகள் ஆகியவை நிறைந்துள்ளதால் ஊட்டச்சத்துகளின் வீடாக ராகி திகழ்கிறது. அரிசி, கோதுமையை ஒப்பிடும்போது ராகியில் புரதம் மிக அதிகம். தியாமின், கால்சியம், இரும்பு சத்து, ரைபொஃப்ளேவின், அமினோ அமிலங்கள், மெத்தியோனின் ஆகியவை இருப்பதால் நான்கு மாத நிறைந்த குழந்தைகளுக்குகூட கொடுக்கலாம்.

கிளைசமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு, குளுட்டன் சிறிதும் இல்லை என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு. உணவால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்னை இருப்பவர்களுக்குகூட ராகி ஒத்துக்கொள்ளும். ராகி சாப்பிடுபவர்களுக்கு குளுக்கோஸ், இன்சுலின் சுரப்பு அதன் வேலைகளும் சீராக நடக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு, ப்ரீமெச்சுராக பிறந்த குழந்தை, ரத்தசோகை போன்ற பிரச்னையுள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரச்னை விலகிவிடும். பிரவுன் அரிசி, சோளம், கோதுமையைவிட ராகி கால்சியம் அதிகம். அதாவது 100 கிராம் ராகியில் 344 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. எலும்புகள், பற்கள் உறுதியாகும். தொடர்ந்து சாப்பிட்டு வருவோருக்கு, வயதாகும்போது வரும் எலும்பு மெலிதல் பிரச்னை வராமல் தடுக்கப்படும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையைப் பராமரிப்பதில், உடல் எடையைப் பராமரிப்பதில் ராகி நமக்கு பெரிதும் உதவும். ராகியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தசோகையை விரட்டும். வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சும்தன்மை கொண்டது. முளைவிட்ட ராகியில்இ ரும்புச்சத்து மிக அதிகமாக இருக்கும்.

ராகியில் உள்ள அமினோ அமிலங்கள், டிரிப்டொபேன் இருப்பதால் பசி உடனே எடுக்காது. அரிசி மற்றும் மற்ற தானியங்களைவிட நார்ச்சத்துகள் அதிகம் என்பதால் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். மிக மெதுவாக ராகி செரிமானாவதால் அதிக கலோரிகள் சாப்பிடுவது தடுக்கப்படும். நார்ச்சத்துகள் மிகுதியாக இருப்பதால் செரிமானம் சீராகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும். குடலில் உள்ள அழுக்குகள் சுத்தமாகும். மலம் மூலமாக வெளியேறும். வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் காக்கும். சைவ விரும்பிகளுக்கு சிறந்த உணவாக ராகி இருக்கும். அவர்களின் புரத தேவையைப் பூர்த்தி செய்யும். அதில் உள்ள மாவுச்சத்து நல்ல மாவுச்சத்து. அதாவது காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் அதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், டிரிப்டோபேன், அமினோ அமிலங்கள் இருப்பதால் கெட்டவையான ஃப்ரீ ராடிக்கல்ஸை எதிர்த்து ஸ்ட்ரஸை குறைக்கும். இயற்கையாகவே மனதை ரிலாக்ஸாக்கும்.

அதிக டென்ஷன், பயம், கவலை, சோர்வு, மனச்சோர்வு, ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை ஆகிய மனம் சார்ந்த பிரச்னைகளை விரட்டி அடிப்பதில் ராகி பெஸ்ட்.

ராகியைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் உள்ள ட்ரைகிளசரைட் அளவு குறைந்து சீராகும். ரத்தத்தில் உள்ள ப்ளேட்லெட் கட்டியாகமல் இருப்பதால் இதயம் சார்ந்த பிரச்னைகள் குறையும். பக்கவாதம் வராமல் தடுக்கப்படும். பால் ஊட்டும் தாய்மார்கள் சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். தாய்க்கும் குழந்தைக்கும் மிக நல்லது.

ஃபோலிக் அமிலங்கள் நிறைந்துள்ளதால் குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது. மறந்துவிடக்கூடாத உணவுகளில் ராகியும் ஒன்று. ஒவ்வொரு சமையலறையிலும் அவசியமாக இருக்க வேண்டிய உணவு. ராகி தோசை, ராகி இட்லி, ராகி புட்டு, ராகி சேமியா, ராகி கஞ்சி, ராகி ஸ்வீட் சேமியா, ராகி கொழுக்கட்டை போன்ற வகைகளில் ராகியைச் சாப்பிடுவது நல்லது.

முளைக்கட்டிய ராகியைப் பொடி செய்து சாப்பிட்டால் பலன்களை இன்னும் அதிகமாகப் பெற முடியும். வாரத்துக்கு மூன்று முறையாவது ராகியை உங்களது உணவுப் பட்டியலில் சேர்த்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *